உளுத்தம் கீர்

Urad Kheer - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

பால் - 250 மி.லி
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
பச்சரிசி (அ) பாஸ்மதி அரிசி - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கப்
துருவிய வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
கேசரிக் கலர் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - தே. அளவு

செய்முறை:

உளுத்தம் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும். முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுக்கவும். தேங்காய்த் துருவலை அரைத்துப் பாலெடுக்கவும். சக்கையை பிழிந்து தனியே வைக்கவும். ஊறிய உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தேங்காய் சக்கையைச் சேர்த்து, தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். அரைத்த விழுதைப் போல், இரண்டு மடங்கு தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும். அதில் அரைத்ததை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிபிடிக்காமல் கிளறவும். கூடவே வெல்லத்தையும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். பத்து நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கி, ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, கேசரிக்கலர், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கவும். கடைசியாக தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கலக்கவும். இந்த உளுத்தம் கீர் உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும்.

எக் காலிஃபிளவர் பொடிமாஸ்

Egg Cauliflower Podimas - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் - ஒரு சிறிய கப்
முட்டை - 2
வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, காலிஃபிளவர், வெங்காயம் இரண்டையும் போட்டு மூடி வைத்து 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். பிறகு பாத்திரத்தைத் திறந்து, அதில் முட்டையை ஊற்றி, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கிளறி, மீண்டும் மூடி, மீடியம் ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். மேலும் பாத்திரத்தை 2 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். சாதம், ஃபிரைடு ரைஸ்சுக்கு நல்ல காம்பினேஷன் இந்த எக் காலி ஃபிளவர் பொடிமாஸ்.

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

Chinese Fried Rice - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

கேரட்டு - 1
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
வெங்காயத்தாள் - 1 பிடி
அஜினோமோட்டோ - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - 3 டீஸ்பூன்
பாசுமதி அரிரி - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்து 2 நிமிடங்கள் மீடியம் ஹையில் மூடியைத் திறந்து வைத்து குக் செய்யவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள் வைத்து, சுவையான சைனீன் ஃபிரைடு ரைஸை சுவைக்கலாம்.

மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ்

Mixed vegetable soup rice - Cooking Recipes in Tamil

தேவையானவை:

வெந்த துவரம்பருப்பு (அ) பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்கறிகள் - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
ஏதாவது ஒரு கீரை - 1 டே.ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மல்லித் தழை - 1 டீஸ்பூன்
மிளகு - 1 சிட்டிகை
சிரகம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தக்காளி - அரை
நெய் (அ) வெண்ணெய் - 1 டீஸ்பூன்
வேக வைத்த சாதம் - 1/2 கப்


செய்முறை:

சாதம், நெய் நீங்கலாக பருப்புடன் எல்லாவற்றையும் குக்கரில் போட்டு, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். வடிகட்டிய சூப்புடன், சாதத்தை மசித்து சேர்க்கவும். இத்துடன் நெய் (அ) வெண்ணெய் சேர்த்து கலந்து கொடுக்கவும்.
ஒரு வயது குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல சத்தான சூப் இது. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு மிக்ஸியில் அரைத்ததை வடிகட்டாமல், அப்படியே சாதத்துடன் கலந்து கொடுக்கலாம்.

பீட்ஸா

Pizza - Cooking Recipes in Tamil

தேவையானவை:

மைதா - 250 கிராம்
ஜீனி - 2 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1/4 டீஸ்பூன் (உடன் வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்)
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்


செய்முறை:

மைதா மாவில் கலந்துவைத்த ஈஸ்ட், பேக்கிங் பவுடர், வெண்ணெய், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிறகு சற்று விரிவான பாத்திரம் 8 அங்குல விட்டம் 2 அங்குல உயரம் ஒன்றில் நெய் தடவி, பாத்திரம் கொள்ளும் அளவு மாவு அரை செ.மீ கணம் இருக்கும்படி விரித்து வைக்கவும். வெண்ணெய் தடவி மாவை பேக்கிங் அடுப்பில் வைத்து 350 டிகிரியில் முக்கால் பாகம் வேகும் வரை வைத்து எடுக்கவும்.

பீட்ஸாவினுள் பரப்புவதற்கு தேவையானவை:

தக்காளி - 300 கிராம்
குடை மிளகாய் - 1
மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
சிஸ் - 50 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

வெங்காயம், பூண்டு, இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி, தக்காளித்துண்டுகளை போட்டு வதக்கவும். உப்பு, மிளகாய்தூள் போடவும். சாஸ்மாதிரி கெட்டியானவுடன் இறக்கவும். 2 தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை வட்டவடிவில் வெட்டி குடை மிளகாயையும் நறுக்கி, சுட்டு வைத்து இருக்கும் முக்கால் பங்கு வெந்த பீட்ஸாவின் உள்ளே வைத்து அடுக்கி, மிளகாய் சாஸ் ஊற்றி சிஸ்ஸை துருவி மேலே தூவிக்கொள்ளவும். வெண்ணெய் 2 டீஸ்பூன் மேலே விட்டு மறுபடியும் 10 நிமிடம் 350 டிகிரி சூட்டில் வேகவைத்து எடுக்கவும். இப்பொழுது சுவையான பீட்ஸா ரெடி.

பைனாப்பிள் குழம்பு

Pineapple Kulambu - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

பைனாப்பிள் - பாதியளவு
நேந்திரம் பழம் - பாதி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
புளிக்காத கெட்டித்தயிர் - 1/2 கப்
தேங்காய் எண்ணை - 3 டே.ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெந்தயம் - சிறிதளவு


செய்முறை:

பைனாப்பிள் தோலை முள் வரை நன்றாக நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுங்கள். நேந்திரம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அதை சிறுசிறு துண்டுகளாக்கவும். இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். தண்ணீர் அதிகமாக இருந்தால் வற்றவைக்கவும். 3 விசில் வரும் வரை வந்ததும், துண்டுகளை எடுத்து ஆறவைக்கவும். இப்போது தயிர், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் போட்டு அடிக்கவும். அதை பைனாப்பிள் துண்டுகளுடன் கலக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணை ஊற்றி கடுகு, வெந்தயம், துண்டு பண்ணிய காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பில் பைனாப்பிள் துண்டுகளை சேர்க்கவும். இப்போது சூடான சுவையான பைனாப்பிள் குழம்பு தயார்.

வெஜிடபிள் சிஸ் பர்கர்

Vegetable Cheese Burger - Cooking Recipes in Tamil

தேவையானவை:

கட்லெட் செய்ய:
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்
வேக வைத்த காய்கறி கலவை - 1/2 கப்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
மைதா (அ) கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய சிஸ் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


பர்கர் செய்ய:
பன் - 1 (அ) பிரெட் - 2 ஸ்லைஸ்
வெண்ணெய் - சிறிதளவு
துருவிய கேரட் - சிறிதளவு
மிகவும் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - சிறிதளவு
தக்காளி சாஸ் - சிறிதளவு


செய்முறை:

எண்ணெய் நீங்கலாக கட்லெட்டுக்கு கொடுத்துள்ள பொருட்களை பிசைந்து கொள்ளவும். அதை சிறு கட்லெட்டுகளாக செய்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். பன்-ஐ குறுக்கு வாக்கில் இரண்டாக வெட்டி, இரண்டு துண்டிலும் வெண்ணெயைத் தடவவும். இதனை தோசைக்கல்லில் போட்டு லேசாக சூடாக்கிக் கொள்ளவும். ஒரு துண்டின் மேல் துருவிய கேரட், முட்டைகோஸை தூவவும். அதன் மேல் ஒரு கட்லெட்டை வைத்து, சிறிதளவு சாஸ் ஊற்றி, வெட்டி வைத்திருக்கும் மற்றொரு துண்டு பன்னால் மூடி பரிமாறவும். (குறிப்பு: கடைகளில் மட்டுமே சாப்பிட்டுப் பழகிய பர்கரை, வீட்டிலேயே செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு இதில் பனீரை சேர்த்து செய்து கொடுக்கலாம். துருவிய காய்கறிகளை பச்சையாக பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள அத்தனை சத்துக்களும் நேரடியாகக் கிடைத்து விடும்.)

கோதுமை ரவை குக்கா

Wheat Rava Upma - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை ரவை - 1 டம்ளர்
பச்சைப் பட்டாணி - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பெரிய பூண்டுப் பற்கள் - 5
பச்சை மிளகாய் - 6
முந்திரி - 5
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
புதினா இலை - 1 பிடி
பிரிஞ்சி இலை - 2
தேங்காய் பால் - 2 டம்ளர்
தண்ணீர் - 2 டம்ளர்
நெய் - சிறிது
ஆயில் - சிறிது
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

ரவையை நெய்விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும், பிறகு குக்கரில் கொஞ்சம் ஆயில் ஊற்றி பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டுத் தாளிக்கவும். பிறகு முந்திரி, புதினா இலை, இஞ்சி பூண்டு விழுது, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி இவைகளைப் போட்டு நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் ரவை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடிவிடவும். 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். (மிதமான தீயில் இதை செய்யவும்) சிறிது நேரம் கழித்து சிறிதளவு நெய் விட்டு கிளறி உருளைக்கிழங்கு குருமாவுடன் இதை பரிமாறவும்.

மஷ்ரூம் மசாலா

Mushroom Masala - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

காளான் - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
வெங்காயம் - 2
மிளகாய் - 5
மிளகு - தே. அளவு
தனியா - தே. அளவு
இலவங்கப்பட்டை - தே. அளவு
இலவங்கம் - தே. அளவு
மஞ்சள் தூள் - தே. அளவு
பூண்டு - தே. அளவு
கொத்துமல்லி - தே. அளவு


செய்முறை:

முதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக கலக்க வேண்டும். வெங்காயத்தையும், தேங்காய் விழுதையும் சேர்க்கவும். பிறகு 5 நிமிடம் சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதன் மேல் கொத்தமல்லி தூவி, சப்பாத்தி, பிரெட், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

முட்டை - ரவாப்பணியாரம்

Egg Paniyaram - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

முட்டை - 2
ரவை - 150 கிராம்
மைதா - 150 கிராம்
தேங்காய்ப் பால் - 1 கப்
சர்க்கரை - 150 கிராம்
சோடா உப்பு - 2 சிட்டிகை
ஏலக்காய் - 4
முந்திரிப்பருப்பு - 20 கிராம்


செய்முறை:

முட்டைகளை நுரைக்க அடிக்கவும். ரவை, மைதாமாவு, சர்க்கரை, தேங்காய், அடித்த முட்டை, சோடா உப்பு, ஏலத்தூள், பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு இவைகளை இட்லி மாவு போல் கரைத்து வைக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு வெந்ததும் எண்ணெய் வடிய வைத்து எடுக்கவும்.

தேங்காய்பால் போண்டா

Coconutmilk Bonda - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

உளுந்தம்பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
ஒரு மூடி தேங்காயைத் துருவி பிழிந்து பாலெடுத்துக்கொள்ளவும். சர்க்கரை தேவைக்கேற்ப, ஏலக்காய் பொடி செய்து போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்

போண்டா செய்ய

உளுந்தம்பருப்பை ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் உப்புக்கலந்து எண்ணெயில், பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இவற்றை தேங்காய்ப்பாலில் போட்டு சிறிது நேரம் ஊறியவுடன் பரிமாறலாம்.

பாசிப்பருப்பு கீரை புட்டு

Gram Greens Puttu - Cooking Recipes in Tamil

தேவையானவை:

பாசிப்பருப்பு - 400 கிராம்
முருங்கைக்கீரை - 1 கப்
சிறிதாக நறுக்கிய வல்லாரை கீரை - 1 கப்
பெரிய வெங்காயத் துருவல் - 1 கப்
இஞ்சி விழுது - சிறிது
பச்சை மிளகாய் - 1/4 கப்
கொத்தமல்லிததழை - 1/4 கப்
கேரட் துருவல் - 1/2 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
ரீஃபைண்ட் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

பாசிப்பருப்பை ஊறவைத்து சற்று உலர்ந்தவுடன் மிக்ஸியில் மூன்று நிமிடம் கொடுத்து தூளாக்கி தனியே வைத்துக் கொள்ளவும். முருங்கைக் கீரை,
வல்லாரைக் கீரை ஆகியவற்றை சிறிது உப்பு சேர்த்து தனித்தனியே வேக வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு நன்கு பொரிந்ததும், இஞ்சி விழுதைச் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயத்தையும் சேர்த்துப் பொன்னிறமாக வறுபட்டதும் பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை ஆகியவற்றைப் போட்டுக் கிளறி இறக்கிற விட வேண்டும். இக்கலவை, வேகவைத்துள்ள முருங்கைக்கீரை, வல்லாரைக் கீரை ஆகியவற்றை
பாசிப்பருப்புத் தூளுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். ருசிக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்போது மிக்ஸ்டு புட்டு மாவு ரெடி.
இதை புட்டுக்குழலில் மேலும் கீழும் கேரட் துருவலைத் தூவி மூடி வேக வைத்து பரிமாறலாம்.


இதன் சிறப்பு:

* புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் என பல சத்துகள் நிறைந்தது.

* சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகள் உள்பட அனைவருக்கும் ஏற்றது.

* காலை, மாலை டிபனுக்கு உகந்தது.

* குழந்தைகளின் நினைவுத்திறனை மேம்படுத்தும்.

* கீரை பிடிக்காத குட்டீஸையும் இதன் ருசி சாப்பிட வைத்துவிடும்.

மேத்தி கோலா

Methi Chole - Cooking Recipes in Tamil

தேவைப்படும் பொருட்கள்:

வெள்ளைக் கடலை - 150 கிராம்
வெந்தயக் கீரை (நறுக்கியது) - 3/4 கப்
கிராம்பு - 2
கருவாப்பட்டை - ஒரு துண்டு
ஏலக்காய் - 2
நெய் அல்லது எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
கருவாப்பட்டை- ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி (நறுக்கியது) - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தக்காளி - 1
புளி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மல்லி இலை - தேவையான அளவு


செய்முறை:

பச்சை மிளகாய் ஓரத்தை மட்டும் கீறிவிடவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். வெள்ளைக் கடலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். வெந்தயக் கீரையை நன்றாக கழுவிவிட்டு, இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து எடுக்கவும். கிராம்பு, கருவாப்பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை எண்ணை விடாமல் வறுத்து, தூளாக்கவும். நெய் அல்லது எண்ணையை சூடாக்கி அதில் சீரகத்தைக் கொட்டி வறுக்கவும். அதில் வெந்தயத்தையும், கருவாப்பட்டையையும் கலந்து கிளறவேண்டும். பிரவுன் நிறம் ஆகும்போது பச்சை மிளகாய், இஞ்சி போன்றவைகளை சேர்க்கவும். ஐந்து நிமிடம் கிளறிவிட்ட பின்பு பெருங்காயத் தூளும், வெந்தயக் கீரையும் சேருங்கள். எல்லாம் வெந்த பின்பு மஞ்சள் தூள் கலந்து கிளறிவிட்டு, தேவைக்கு உப்பு சேருங்கள். பின்பு நறுக்கிய தக்காளியையும் சேர்த்திடுங்கள். தக்காளி வெந்த பின்பு அதில் வேகவைத்த கடலையை கொட்டுங்கள். கொட்டுவதற்கு முன்பு மூன்று தேக்கரண்டி அளவிற்கு கடலையை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். மேற்கண்ட கலவையில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஐந்து நிமிடங்கள் நன்றாக வேக வையுங்கள். பின்பு தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் வேகவிடுங்கள். எடுத்து வைத்திருக்கும் மூன்று தேக்கரண்டி கடலையை நன்றாக தூள் செய்து கலவையில் சேர்த்திடுங்கள். அதில் புளி பேஸ்ட் கலந்து வேக விடுங்கள். அதில் வறுத்து தூள் செய்து வைத்திருக்கும் கறி மசாலை சேருங்கள். நன்றாகக் கிளறிவிட்டு, கிரேவி கெட்டியாகும்போது, தேவைப்பட்டால் உப்பு கலந்து இறக்குங்கள். மல்லி இலை கலந்து, பரிமாறுங்கள்.

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

Chinese Fried Rice - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

கேரட் - 1
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
வெங்காயத்தாள் -1 பிடி
அஜினோமோட்டோ - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள் -1 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - 3 டீஸ்பூன்
பாசுமதி அரிசி - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்து 2 நிமிடங்கள் மீடியம் ஹையில் மூடியைத் திறந்து வைத்து குக் செய்யவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள் வைத்து, சுவையான சைனீஸ் ஃபிரைடு ரைஸை சுவைக்கலாம்.

உருண்டைக் கறிக்குழம்பு

Mutton Urundai Kozhambu - Cooking Recipes in Tamil

தேவையான பொருள்கள்:

மட்டன் (கொத்தியது) - 1 கிலோ
தேங்காய் - 1/2 முடி
வெங்காயம் - 6
தக்காளி - 4
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 3
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உடைத்த கடலை - ஒரு கைபிடி
சோம்பு - சிறிதளவு


செய்முறை:

கறித் துண்டுகளை நன்கு அலசி மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து கொள்ள வேண்டும். தேங்காயை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். உடைத்த கடலையை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் அரைத்த கறித் துண்டுகளைப் போட்டு அதனுடன், வெங்காயம், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் (இது எல்லாமே எடுத்து வைத்திருப்பதில் பாதி அளவு), உடைத்த கடலை தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை என அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், சோம்பு, சேர்த்து பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதையும், பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் (மீதி இருப்பது) சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை போடவும்.

குழம்பு நன்கு கொதித்தவுடன் ஆவியில் வேகவைத்த உருண்டைகளை போட்டு அனல் குறைத்து வைக்கவும். 5 நிமிடம் வைத்து பிறகு இறக்கிவிடவும். இது சாப்பாட்டுக்கு மிகவும் அருமையாக இருக்கும். குழம்பும் தயார், துணை உணவாக கறி உருண்டையும் தயார். கறி உருண்டை குழம்பின் வாசனை உங்களை விட்டு வைக்குமா என்ன, சமைத்து ருசி பாருங்கள்... குறிப்பு : குழம்பில் உருண்டைகளைப் போடும் போது தீ குறைவாக இருந்தால் தான் உருண்டைகள் உடையாமல் வரும்.

ஆயில் ஃப்ரி சம்மர் கர்ரி

Oil fri summer curry - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 50 கிராம்
வெள்ளரிக்காய் - 400 கிராம்
பூசணி - 1 கீற்று
மணத்தக்காளிக்கீரை நறுக்கியது - 1 கப்
பெரிய வெங்காயத் துண்டுகள் - 1 கப்
தக்காளி விழுது - 1\2 கப்
கொத்தமல்லித் தழை விழுது - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் கீறியது - 10
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

துவரம் பருப்பை வேக வைக்கவும். வெந்தவுடன் மணத்தக்காளிக் கீரையை சேர்த்து வேக விடவும். வெந்ததும் போதுமான நீருடன் தயாரித்து வைத்துள்ள விழுதுகளைக் கலந்து கொதிக்க வைக்கவும். பின்னர் வெள்ளரிக்காய், பூசணி, வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக வைக்கவும். பதம் பார்த்து அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் எலுமிச்சைச் சாற்றை கலந்துவிடவும்.

இந்த உணவு கோடையை சமாளிக்க நீர்ச்சத்து, ஏனைய சத்துகளுடன் விட்டமின் சி - யும் நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது. எண்ணெய் இல்லாததால் எளிதில் ஜீ“ரணமாகும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடப் பொருத்தமானது.

மாக்கீரை

Mango Greens - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:

கீரை - 1 கட்டு
மாங்காய் - 1
முழுப்பூண்டு - 1
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய்


செய்முறை:

கீரையை கடைவதற்கு ஏற்றாற் போல கிள்ளி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். மாங்காயை ஊறுகாய் போடுவதற்கு நறுக்குவது போல கொஞ்சம் பெரிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். கீரையை வேக வைக்கும் பாத்திரத்தில் கீரையைப் போட்டு தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் நறுக்கிய வெங்காயம். பூண்டு, தக்காளி, பச்சை, மிளகாய். சிறிது மஞ்சள் தூள் போட்டு மூடி வேக வையுங்கள். கீரை நன்கு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் வேகவிடுங்கள். மாங்காய் எளிதில் வெந்துவிடும். பின்னர் கீரையை இறக்கி தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கீரையில் ஊற்றுங்கள். அவ்வளவுதான் மாக்கீரை தயார்.

கொழுக்கட்டை

Kozhukattai - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

பதப்படுத்திய பச்சரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 11/4 கப்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 11/4 டீஸ்பூன்

பூரணம் செய்வதற்கு:

முக்கால் முற்றிய தேங்காயின் வெள்ளைப் பகுதியை மட்டும் துருவியது - 1 கப்
துருவிய வெல்லம் - 1 கப்
நெய்யில் வறுத்தமுந்திரி துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டு கடலைமாவு - 1 டேபிள் ஸ்பூன்


கொழுக்கட்டை மேல்மாவு செய்யும் விதம்:

பச்சரிசியை களைந்து ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்பு வடிகட்டி மூலம் தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு காட்டன் துணியில் பரவலாக நிழலில் அல்லது ஃபேன் அடியில் ஒன்றரை மணி நேரம் உலர்த்தவும். இதை அரிசி மட்டும் அரைக்கும் மாவு சல்லடையில் சலித்து பெரிய தட்டுக்களில் பரவலாக ஒரு நாள் முழுவதும் நிழலில் நன்றாக உலர்த்தவும். கையில் ஈரம் ஒட்டாமல் நன்கு உலர்ந்த பின் டப்பாவில் போட்டு விட்டு டைட்டாக மூடி விடவும்.


செய்முறை:

1 கப் அரிசி மாவுக்கு 11/4 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அந்த தண்ணீரை ஒரு கனமான கடாயில் கொதிக்க விடவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயும், கால் டீஸ்பூன் உப்பும் சேர்க்கவும். தண்ணீர் கொப்பளித்து கொதிக்கும் போது அடுப்பு தீயை மிக குறைவாக வைத்து அரிசி மாவை நட்ட நடுவில் குவியலாக போடவும். உடனடியாக மாவின் நடுவில் ஒரு கரண்டியை நுழைத்து, வெளிப்புறம் நீட்டிக் கொண்டிருக்கும் இடைவெளியை விட்டு வாணலியை ஒரு மூடியால் மூடவும். பத்து நிமிடங்கள் மிகக் குறைந்த தீயில் வேக விடவும். அடுப்பை அணைத்துவிட்டு, மூடியைத் திறந்து, கரண்டியில் வேகமாக மாவு கட்டி தட்டாமல் கிளறவும். சிறிது சூடு ஆறியதும், கையினால் நன்றாக பிசையவும். தேவையானால், மாவு கையில் ஒட்டாமல் இருக்க இரண்டு கையிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும். நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாகக் கொண்டு இரண்டு கையாலும் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் உபயோகித்து, வெளிப்புறத்திலிருந்து வட்டமாக மிக மெலிதாக கிண்ணம் போல் செய்து கிண்ணத்திற்குள் செய்து வைத்திருக்கும் பூரணத்தை வைத்து சுற்றிலும் இருக்கும் மாவை ஒன்றாக சேர்த்து கோபுர கலசம் போல் கொண்டு வந்து பூரணம் வெளியே வராதபடி எந்தப் பக்கமும் இடைவெளி விரிசல் இல்லாதவாறு செய்ய வேண்டும். பூரணம் செய்ய தேங்காயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இத்துடன் துருவிய வெல்லத்தை கலந்து ஒரு கடாயில் ஒற்றாற்போல் நிதான தீயில் வைத்து, கிளறவும். வெல்லம் நீர்வற்றி சுருண்டு வரும்போது பொட்டுக் கடலை மாவு, ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு சேர்த்து, கலந்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிட்டு சிறு உருண்டைகள் ஆனபின்பு கிண்ணத்திற்குள் பூரணத்தை குவித்து மூடி விடவும். இதை போல் எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லி குக்கரில் வைத்தோ அல்லது வாணலியில் தண்ணீர் வைத்து ஒரு ஓட்டை உள்ள தட்டை வைத்து, அதன் மேல் ஒரு இலையோ மெல்லிய துணியோ போட்டு செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒற்றை பரவலாக வைத்து காற்று புகாமல் மூடி பத்து நிமிடம் வேக வைக்கவும். குக்கரானால் வெயிட் போட வேண்டாம். மேலே ஆவி வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஆறியபின் திறந்து கொழுக்கட்டைகளை ஜாக்கிரதையாக பிரியாமல் நசுங்காமல் எடுத்து வைக்கவும்.

புரொட்டீன் தால்

Protein Dhal - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1/4 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
காராமணி - 1/4 கப்
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சிரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
சிரகம் - 1/2 டீஸ்பூன்  

உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை:

காராமணியை 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய காராமணியுடன் பருப்புகளை சேர்த்து, மூன்று கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயை காயவைத்து, அதில் சிரகம் தாளித்து பச்சைமிளகாய், பூண்டை சேர்க்கவும். பிறகு, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, வேகவைத்த, பருப்பு, மிளகுத்தூள், சிரகத்தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இதை பிரட், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.
வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு. பருப்புகளை தோலுடன் சேர்த்தால் புரதச்சத்துடன் நார்ச்சத்தும் கிடைத்துவிடும்.

ஆப்பிள் டிலைட்


Apple Delight - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

பெரிய ஆப்பிள்கள் - 3
பொடி செய்யப்பட்ட காய்ந்த ரொட்டியின் பாகங்கள் - 1 கப்
நாட்டு சர்க்கரை - 3/4 கப்
வெண்ணெய் - 1 கப்
பழ கலவை ஜாம் - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த ரொட்டி - 1 துண்டு
லவங்கப்பட்டை - 1 டீஸ்பூன்
முட்டையின் மஞ்சள் பாகங்கள் - 2
அலங்கரிக்க:
சிறிய ஆப்பிள் - 3
சிவப்பு ஜெர்ரி பழங்கள் - 6
அடித்து கலக்கப்பட்ட க்ரீம்


செய்முறை:

ரொட்டியின் கெட்டியான மேல் பாகத்தை எடுத்து விட்டு அதன் மிருதுவான பாகத்தை விரல்கள் அளவு மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். கொஞ்சம் வெண்ணெயை எடுத்து உருக வைத்துக் கொள்ளவும். உருகிய வெண்ணெயில் வெட்டி வைத்திருக்கும் ரொட்டித் துண்டுகளின் இரண்டு முனைகளையும் தோய்த்து எடுக்கவும். ஆப்பிளின் தோலை சீவி விட்டு, அதன் உள்ளிருக்கும் பாகங்களைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளில் வெண்ணெய்யைத் தடவி, கொதிக்கும் நீரில் வேக வைக்கவும். அவை மிருதுவாக மாறியதும், நன்கு அவற்றை மசித்து, கூழாக தயாரித்து வைத்து கொள்ளவும். முட்டையின் மஞ்சள் பாகங்கள், பழ மிக்சர் ஜாம், பொடியாக்கபட்ட லவங்கப்பட்டை முதலியவைகளை மசித்து வைத்து ஆப்பிளுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.ஃபுட்டிங் செய்யும் பாத்திரத்தை எடுத்து அதன் உட்பக்கம் சுற்றிலும் வெண்ணெயை தடவவும். அதன் பின்பு மெலிதாக வெட்டப்பட்ட ரொட்டித் துண்டுகளை ஃபுட்டிங் நடுவில் ஆப்பிள் கலவையை ஊற்றி வைக்கவும். ரொட்டித் துண்டில் வெண்ணெய் தடவி, ஆப்பிள் கலவையின் மேல் பாகத்தில் அதை மூடுவது போல வைக்கவும். வெண்ணெய் பேப்பரினால் ஃபுட்டிங் பாத்திரத்தை மூடி இறுக கட்டி விடவும். பின்பு ஃபுட்டிங் பாத்திரத்தை குக்கரில் வைத்து 30 நிமிடங்கள் குக்கரை அடுப்பில் தொடர்ந்து வைக்கவும். ஆப்பிளை இரு சமபாதிகளாக வெட்டி, ஜாமையும், க்ரீமையும் அந்த பாதிகளில் தடவி, ஜெர்ரி பழங்களையும் இடையிலே வைத்து, அலங்கரித்து விடவும். இப்போது சுவையான ஆப்பிள் டிலைட் ரெடி.

கோதுமை ரவை கதம்பம்

Wheat Rava Mixed - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:

உடைத்த கோதுமை - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
வாழைக்காய் - 1
கத்தரிக்காய் - 2
பீன்ஸ் - 8
முருங்கைக்கீரை - கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் - 1
உரித்த பட்டாணி - 1/4 கப்
கேரட் - 1
புளிக்கரைசல் - சிறிது
உப்பு - ருசிக்கேற்ப
சாம்பார் பொடி - 21/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நறுக்கிய கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

கோதுமையில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். கடலைப்பருப்பைக் கழுவி அதில் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். இரண்டையும் குக்கரில் வேறு வேறு பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடங்கள் வெயிட் வைத்து வேக வைக்கவும். எல்லா காய்கறிகளையும் நீள வாக்கில் நறுக்கவும். கேரட், பீன்ஸ், பட்டாணி மூன்றையும் ஆவியில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, முதலில் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும், கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்கீரை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறிவிடவும். அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். வெந்த கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து, உப்பு மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதித்த பிறகு வெந்த பருப்பு, கோதுமை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கிளறவும். கொத்த மல்லி சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

மில்டா சோமாஸ்

Milda Samosa - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

சோமாஸ் பொரித்து எடுக்க எண்ணெய் - 1\2 லிட்டர்
சோமாஸ்ஸிற்கு வெளிமாவு தயார் செய்ய:
மைதா - 1\4 கிலோ
ரவை - 150 கிராம்
முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்) நன்றாக அடித்து வைக்கவும். (முட்டை சாப்பிடாதவர்களுக்கு தேவையில்லை)
தேங்காய் - 1\2 முடி துருவி கட்டியான பால் 150 மி.லி.
ஏலக்காய் - 10 உரித்து அரைகுறையாக தூள் செய்தது
உப்பு - 2 சிட்டிகை

பூரணம் தயார் செய்ய:

பால் - 1\2 லிட்டர், நீர் சிறிதுமின்றி. கட்டியான கோவா காய்ச்சி நன்கு உதிர்த்து விடவும்.
தேங்காய் - 1\2 முடி துருவி நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
ரவை - 50 மி.லிட்டர் நெய் விட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
ஏலக்காய் - 5 நன்கு தூள் செய்யவும்.
முந்திரிப்பருப்பு - 25 கிராம் - பொடியாக வெட்டி நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
சினி - 100 கிராம் - (இனிப்பு தேவைக் கேற்றபடி)

செய்முறை:

மைதா, ரவையுடன் டால்டாவைக் கலந்து அத்துடன் ஏலப்பொடியையும் கலந்து நன்றாக ஒன்று சேரும் வரை பிசையவும். அடித்த முட்டையை விட்டு நன்றாக ஒன்று சேரும் வரை பிசையவும். தேங்காய் பாலுடன் உப்பு கலந்து மாவில் விட்டு நன்றாக மிருதுவாகும் வரை பிசைந்து ஒரு ஈரத்துணியில் குறைந்தது 1\2 மணி நேரம் சுற்றி வைக்கவும். நன்றாக ஊறியதும், ஒரு உருண்டை மாவு எடுத்து பலகையில் மெல்லியதாக விரித்து ஒரு வட்ட மூடியில் வெட்டி, நடுவில் பூரணத்தை வைத்து, மூடி, சோமாஸ் கரண்டியால் ஓரத்தை வெட்டவும் அல்லது தண்ணீர் வைத்து ஓரத்தை பிரியாதபடி ஒட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பாதுஷா

Badusha - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

மைதா - 1\2 கிலோ
பேக்கிங் பவுடர் - 3 சிட்டிகை
சோடா உப்பு - 1\4 டீஸ்பூன்
டால்டா - 2 1\2 கரண்டி
தண்ணீர் - 100 மி.லி.
ஏலப்பொடி - 1 டீஸ்பூன் (அரை குறையாக தூள் செய்தது)
சுடுவதற்கு தேவையான டால்டா

செய்முறை:

டால்டா, பேக்கிங் பவுடர், சோடா உப்பு, ஏலம் இவற்றை கலந்து நன்றாக கையினால் தேய்த்து கலக்கவும். பின் மைதா மாவு கலந்து தண்ணீர் விட்டு நன்றாகப் பிசையவும். பின் உருண்டையை எடுத்து ஒரே பக்கமாக சிறிது நேரம் உருட்டி, பின்பு தட்டையாக்கி நடுவில் பெருவிரலால் அமுக்கி தட்டில் செய்து வைக்கவும். விரிந்த வாணலியில் டால்டாவை சிறிதுவிட்டு சூடேற்றவும். சிறிது சூடேறியவுடன் (கையில் தொடுமளவு சூடு) வாணலியை கீழே இறக்கி பிறகு சிறிது டால்டா விடவும். செய்த பாதுஷாக்களை வாணலியில் வரிசையாக அடுக்கி அடுப்பில் தூக்கி வைக்கவும். தீ மிதமாக இருந்தால் நல்லது. பாதுஷா வடைபோல் மிதக்க ஆரம்பித்தவுடன் கம்பியினால் திரும்பி போடவும். இலேசாக சிவந்தவுடன் எடுத்து தனியாக தட்டில் ஆறவைக்கவும். வாணலியை மறுபடி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து, டால்டாவை ஆறவிடவும். சிறிது ஆறியதும் மறுபடி அதில் புதிய டால்டா சிறிது விடவும். உடனே பாதுஷாக்களை அதில் அடுக்கி வைத்து மறுபடி சூடேற்றவும். இவ்விதம் ஒவ்வொரு தடவையும் டால்டாவை கீழே இறக்கி ஆறவைப்பதும், புதிய டால்டா சேர்ப்பதும் மிகமிக முக்கியம். பின்பு, சினியை தண்ணீர் விட்டு இளம்பாகு காய்ச்சி, ஆறிய பாதுஷாக்களை அதில் போட்டு எடுக்கவும். இரண்டாவது தடவை அதே சீனிப் பாகை கையில் ஒட்டும் பதத்தில் காய்ச்சி, அதில் பாதுஷாக்களைப் போட்டு எடுக்கவும். பின் மூன்றாவது தடவை வெள்ளை நிறம் வரும் வரைப் பாகைக் கிளறிக் கொண்டே இருக்கவும். வெள்ளை நிறம் வந்தவுடன் மறுபடி பாதுஷாக்களை கையினால் அதில் தோய்த்து எடுத்து தட்டில் ஆறவைத்தால் மேலே வெள்ளை நிறமாக இருக்கும். அழகிற்கு கலர் தேங்காய்ப்பூ மேலே தூவலாம். நடுவில் ஆறிய சினிப்பாகை தோய்த்தவுடன் உள்ள பள்ளத்தில் முந்திரிப்பருப்போ, கிஸ்மிஸ் பழம் ஒன்றோ வைக்கலாம்.

பனீர் போண்டா

Paneer Bonda - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

பூரணத்துக்கு:

துருவிய பனீர் - 1 கப்
பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1\2 டீஸ்பூன்
பொடித்த மசாலா (பட்டை, லவங்கம், ஏலக்காய்) - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1\4 கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


மேல் மாவுக்கு:

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 1\4 கப்
ஓமம் - 1\4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1\2 டீஸ்பூன்
சமையல் சோடா - 1\4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெயைக் காய வைத்து நறுக்கிய பூண்டைப் போட்டு வெங்காயம், இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். காய்கள் சுருள வதங்கியதும், உப்பு, மிளகாய்த்தூள், பனீர் சேர்த்து நன்கு வதக்கி தனியாத்தூள், பொடித்த மசாலாத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கினால் பூரணம் ரெடி! மேல் மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி, மாவில் தோய்த்தெடுத்து காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சன்னா டிக்கி

Channa Tikky - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை - 1/4 கிலோ
கடலைமாவு - 100 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 25 கிராம்
கொத்தமல்லி இலை - 100 கிராம்
கறிவேப்பிலை - 10 கிராம்
மிளகாய் தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - 5 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
கரம் மசாலா தூள் - 15 கிராம்
சோம்பு - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
எண்ணெய் - 1/4 லிட்டர்


செய்முறை:

கொண்டைக்கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டுப் பொடித்துக் கொள்ளவும். கடலை மாவுடன், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாவும் சேர்க்கவும். சோம்பையும், சீரகத்தையும் வெறுமனே வறுத்து, சிவந்ததும் ஆற வைத்து, கலவையில் சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து எல்லாவற்றையும் கெட்டியாகப் பிசையவும். வடை பதத்துக்கு இருக்க வேண்டும். அதைச் சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடித்து, தட்டி, தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, இரண்டு பக்கங்களும் சிவந்து, முறுகலானதும் எடுக்கவும். இதையே 20 கிராம் ஆம்ச்சூர் பவுடரும், 15 கிராம் சன்னா மசாலா பவுடரும் சேர்த்து செய்தால் வட இந்திய ஸ்டைல் டிக்கி தயார். சாதத்துடன் பரிமாறலாம். மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.

பீட்சா சாண்ட்விச்

Pizza Sandwich - Cooking Recipes in Tamil


தேவையானவை:

பீட்சா நான் (பீட்சா பேஸ்) - 4
வெங்காயம், குடமிளகாய், காளான், பேபிகார்ன் (எல்லாம் பொடியாக நறுக்கியது) - தலா கால் கப்
பீட்சா சாஸ் அல்லது தக்காளி சாஸ் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய் தூள் - சிறிது
ஒரிகானோ எனப்படும் இத்தாலிய மூலிகை - 2 சிட்டிகை
மோசரில்லா சிஸ் - 50 கிராம் (இவை டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்).
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - வதக்கத் தேவையான அளவு


செய்முறை:


கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், குடமிளகாய், காளான், பேபிகார்ன் சேர்த்து வதக்கவும். கடைசியில் மிளகாய் தூள், ஒரிகானோ சேர்த்து இறக்கவும். பீட்சா நானை மத்தியில் இரண்டாக வெட்டவும். உள்ளேயும், வெளியேயும் வெண்ணெய் தடவவும். பீட்சா சாஸ் அல்லது தக்காளி சாஸை உள்ளே தடவி, தேவையான காய்கறி வதக்கலை அதன்மீது பரவலாகத் தூவவும். துருவிய சீஸை அதன் மேல் வைத்து, மேல்பாகத்தை ப்ரெட் சான்ட்விச் போல மூடவும். முன்பே சூடாக்கப்பட்ட சான்ட்விச் டோஸ்டரின் மத்தியில் வைத்து நன்றாக டோஸ்ட் செய்யவும்.
டோஸ்டர் இல்லாதவர்கள், தோசைக்கல் உபயோகித்தும் இதைச் செய்யலாம். தோசைக்கல்லில் பீட்சாவின் அடிப்பாகத்தை வைத்து, அதன் மேல் ஒரு தட்டு போட்டு மூடி, கனமான பொருளை வைக்கவும். வெந்ததும் திருப்பி போட்டு மூடவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும், சூடாகப் பரிமாறவும்.

பனீர் டோஸ்ட்

Paneer Toast - Cooking Recipes in Tamil

தேவையானவை:

கோதுமை பிரெட் - 6 துண்டுகள்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
(கொத்தமல்லி - 1 கட்டு
புதினா - 1/2 கட்டு
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
இவற்றை ஒன்றாக அரைத்த) பச்சைச் சட்னி - 1 டேபிள்ஸ்பூன்

பூரணத்துக்கு:

துருவிய சோயா பனீர் - 1/2 கப்
துருவிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும். பிரெட்டின் ஒருபுறம் லேசாக எண்ணெய் தொட்டு தடவவும். மறுபுறம் பூரணத்தை பரத்தவும். மற்றொரு பிரட் துண்டில் ஒருபுறம் எண்ணெய் தடவி, மறுபுறம் சிறிதளவு பச்சை சட்னியை பரப்பிக் கொள்ளவும். இரண்டு பிரெட் துண்டுகளின் சட்னி, பூரணம் பக்கம் உள்பக்கம் வருவதுபோல சேர்த்து, சுற்றிலும் அழுத்திவிடவும். தோசைக்கல் காய்ந்ததும் அதில் போட்டு, மிதமான தீயில் இருபுறமும் திருப்பி வேகவைத்து எடுத்து, சூடாக பரிமாறவும்.
(குறிப்பு: கோதுமை பிரெட்டில் நார்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. எண்ணெய் உணவு ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு இந்த அயிட்டம் நல்ல சாய்ஸ்!)

ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி

Dry Fruit Dates Idli - Cooking Recipes in Tamil










தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 10
பாதாம் - 10
இஞ்சி - சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 3
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பேரீச்சம்பழம் - இட்லிக்கு ஒன்று வீதம்


செய்முறை:


அரிசி, உளுந்தை சுத்தம் செய்து சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து, வெந்தயம் சேர்த்துக் கரகரப்பாக கிரைண்டரில் அரைக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து 4 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து, கடலைப்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உடைத்த முந்திரி, பாதாம் சேர்த்து, தாளித்து மாவில் கலக்கவும். மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் வேக வைக்கவும். பாதி வெந்ததும், இட்லி மீது ஒவ்வொரு பேரீச்சம்பழத்தைப் பதிக்கவும். இட்லி வெந்ததும் இறக்கவும். தேங்காய் சட்னி, சாம்பார், புதினா சட்னி தொட்டுக்கொள்ளலாம். இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான ஆகாரம்.

பால் சோளம் மிளகு வறுவல்

Baby Corn Pepper Fry - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:.

பேபிகார்ன் (மிகச்சிறிய அளவிலான சோளம்) - 1/2 கிலோ
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சைமிளகாய் - 25 கிராம்
கொத்தமல்லி இலை - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 100 கிராம்
மிளகு - 75 கிராம்
சோம்பு - 20 கிராம்
சீரகம் - 10 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - 15 கிராம்
மஞ்சள்தூள் - 5 கிராம்


செய்முறை:

பேபிகார்னை சுத்தம் செய்து, உப்பு சேர்த்து ஸ்பான்ஜ் மாதிரி வேக வைத்து, சின்னதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். மிளகு 10 கிராம், சோம்பு 5 கிராம், சீரகம் ஏலக்காய் ஆகியவற்றை வெறும் கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள சோம்பு, சீரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். வேகவைத்து நறுக்கிய பேபிகார்ன் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வரும்போது, பொடியைத் தூவிக் கிளறவும். ஆவி வந்து, வாசனை வரும்போது இறக்கி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, தயிர்சாதம் என எதனுடனும் சாப்பிட உகந்தது இது.

காலிஃப்ளவர் ஸ்டூ குருமா

Cauliflower Stoo Kuruma - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் (வேக வைத்தது) - 1 கப்
வெங்காய விழுது - 1 கப்
தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
டால்டா - 50 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - தேவையானது
மல்லித்தழை - தேவையானது
உப்பு - தேவையானது
தேங்காய் விழுது - 1 கரண்டி

செய்முறை:

டால்டாவைச் சுட வைத்து பெருஞ்சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். இதில் அரைத்த வெங்காய விழுதைப் போட்டு பச்சை வாசனை போக கிளறி காலிஃப்ளவர், தக்காளி சாஸ், உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியாக, அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கிளறி கருவேப்பிலை, மல்லித்தழை போட்டு இறக்கவும்.

திரட்டிப் பால்

Thirattipal - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:
கன்டென்ஸ்டு மில்க் - 1 டின் (200 கிராம்)
பால் - 1 டேபிள் ஸ்பூன்
கெட்டியான ஆடைத்தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்


செய்முறை:

கன்டென்ஸ்டு மில்க்கை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மைக்ரோ மோடில் ஹைபவரில் 3 நிமிடங்கள் சூடாக்கவும்.

வெளியே எடுத்து பாலில் கரைத்த குங்குமப்பூவை சேர்த்து கலந்து, மீடியம் ஹைபவரில் 2 நிமிடங்கள் வைக்கவும்.

கெட்டித்தயிர், நெய், ஏலப்பொடி எல்லாம் சேர்த்து நன்றாகக் கலந்து ஹைபவரில் 3 நிமிடங்கள் வைக்கவும். எடுத்து நன்றாகத் திரிந்து இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால் தயாராகிவிட்டது. இல்லையென்றால் மேலும் 2 அல்லது 3 நிமிடங்கள் வைக்கவும்.

கெட்டித்தயிர் வேண்டுமானால், தயிரை ஒரு மெல்லிய மஸ்லின் துணியில் கட்டி இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் தண்ணீர் முழுவதும் வடியும்படி தொங்க விடவும்.

கன்டென்ஸ்டு மில்க்குக்குப் பதிலாக இனிப்பில்லாத கோவாவை (பால் திட ரூபத்தில்) உபயோகிக்கலாம். திரட்டிப்பாலின் தன்மையை அதிகரிக்க நெய்யும், நிறத்தை அதிகரிக்க குங்குமப்பூவும், சுவையையும், மணத்தையும் அதிகரிக்க ஏலப்பொடியும் உதவுகிறது. எனினும் இவற்றைச் சேர்ப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

ரவா புட்டிங்

Rava Pudding - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்: 

பால் - 2 லிட்டர்
முந்திரிப்பொடி - 1 கப்
சிரோட்டி ரவை - 1/2 கப்
காஸ்டர் சர்க்கரை அல்லது சுகர் பவுடர் - 1 1/2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பால் தயாரிக்கும் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
(அல்லது பாதாம், குங்குமப்பூ, ஏலக்காய், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும்)
ஜாதிக்காய் பொடி - சிறிது
வறுத்த பாதாம், முந்திரி, திராட்சை அலங்கரிக்க


செய்முறை:


இதை மைக்ரோவேவ் அவனில் செய்தால் நன்றாக இருக்கும். (குக்கரிலும் செய்யலாம்) பாலை கனமான வாணலியில் வைத்து மூன்றில் ஒரு பங்கு வரை சுண்டச் காய்ச்சவும். முந்திரியை சூடான வாணலி அல்லது அவனில் வைத்து சிவக்காமல் க்ரிஸ்ப்பாக ஆக்கி மிக்சியில் நைசாக பொடிக்கவும். 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஒரு தவாவில் சூடாக்கி, அதில் ரவையைப் போட்டு, நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். சுண்டக் காய்ச்சிய பாலைச் சேர்த்து கெட்டியாக வேக வைக்கவும். அகல பாத்திரத்தில் மீதமிருக்கும் நெய்யை கரண்டியால் அடித்துக் கலந்து நுரைவரும் வரை செய்து, அத்துடன் சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்கு கலந்து, தயிர் போல் மிருதுவாக வரும்படி தயாரிக்கவும். இத்துடன் ரவை கூழ், முந்திரிப்பொடி, பாதாம்பால், மசாலாபால், ஜாதிக்காய் பொடி சேர்க்கவும். அவனில் வைப்பதனால் 200 Cக்கு (10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும்) மைக்ரோவேவ் அவன் என்றால் 100 சதவீதம் ஹை சூட்டில் 7 அல்லது 8 நிமிடம் வைக்கவும்.) 10 நிமிடம் ஆறவைத்து பின் ப்ரிட்ஜில் வைக்கலாம்) பானில் தட்டு போட்டு அரை அங்குலம் உயரம் வரை நீர் விட்டு அதன் மேல் புட்டிங் மின்ஸ் போட்டிருக்கும். பாத்திரம் எல்லா பக்கமும் (நெய் தடவினால்) வைத்து வெயிட், கேஸ்கெட் போடாமல் வைத்து 20 நிமிடம் குறைந்த நிதானத்தீயில் வைத்து, வாசனை வந்ததும் அணைத்து விட்டு, 10 நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து எடுத்து, ஆறியதும் ப்ரிட்ஜில் வைக்கவும். (வெந்து எடுத்ததும் அதன் மேல் பாதாம், முந்திரி தூவி அலங்கரிக்கலாம்.)

கேரட் குக்கீஸ்

Carrot Cookies - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு - 1 கப்
கேரட் - 5
பேக்கிங் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 கப்
வெண்ணெய் - 2 கப்
மைதா - 2 கப்
முட்டை - 1
வெனிலா - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை, முந்திரி - 8
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு


செய்முறை:

கேரட்டை நன்றாக அவித்து, மசித்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கேரட் மசியலை சேர்க்கவும். மைதா, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றை நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை கேரட் கலவையுடன் கலந்து நன்றாக கடைய வேண்டும். தேவையானால் சிறிது எஸ்சென்ஸ் சேர்த்து கொள்ளலாம். பின்னர் இந்த கலவையை சிறிய டப்பாக்களிலோ அல்லது பெரிய தட்டிலோ நெய் தடவி, சிறிது இடைவெளி விட்டு ஊற்ற வேண்டும். அதன் மேற்பரப்பில் முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் போன்றவற்றை தூவலாம். இதனை 10 முதல் 15 நிமிடம் வரை ஓவனில் வைத்து பேக் பண்ணவும். பின் வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆறிய பின் பரிமாறலாம்.

பூண்டு-வெங்காய புலாவ்

Garlic Onion Pulao - Cooking Recipes in Tamil

தேவையானவை: 

பாஸ்மதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஷ்ரூம் (அ) பனீர் - தேவைக்கேற்ப
அரைத்துக் கொள்ள:
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகாய் தூள் - காரத்துக்கு ஏற்ப 1/2 (அ) 1 டீஸ்பூன்
தாளிக்க:
பட்டை - 1
லவங்கம் - 1
ஏலக்காய் - 1
சிரகம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்


செய்முறை: 

அரிசியை உதிராக வடித்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லை காய வைத்து மிதமான தீயில் வெங்காயம், பூண்டை பரப்பியது போல் போட்டு 5 முதல் 10 நிமிடம் வைக்கவும். நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காயைச் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்க்கவும். குறைந்த தீயில் பச்சை வாடை போக வதக்கவும். தோசை கல்லில் காய வைத்த வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கி பனீர் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். கடைசியில் சாதம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
முளைகட்டிய பயிறை ஆவியில் வைத்து எடுத்து தயிரில் போட்டு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம். காய்கறிகளை வேக வைத்தும் இதற்கு தொட்டுக் கொள்ளலாம்.
எவ்வளவு பனீர் சேர்க்கிறீர்களோ, அந்த அளவுக்கு தினசரி எடுத்துக் கொள்ளும் பாலின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். பனீருக்கு பதில் கொழுப்பு இல்லாத சோயா பனீரைப் பயன்படுத்தலாம்.

காராமணி சப்ஜி

Karamani Sabzi - Cooking Recipes in Tamil

தேவையானவை: 

காராமணி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
பட்டை - சிறிதளவு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பெரிய ஏலக்காய் - 2
கிராம்பு - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன்
தனியாதூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காராமணியை நன்றாக கழுவி, ஒரு அங்குல நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நான்கு துண்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்திருக்கும் காராமணியை பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள்தூள், உப்பு, ஆம்சூர் பொடி, தனியாதூள் ஆகியவற்றை சேர்க்கவும். காராமணி வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவை, வதக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

சென்னா ரசம்

Channa Rasam - Cooking Recipes in Tamil

தேவையானவை: 

ஊற வைத்து வேகவைத்த சென்னா - 1/2 கப்
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மிளகு - 1 டீஸ்பூன்
சிரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு (விருப்பப்பட்டால்) - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்


செய்முறை:

பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, பொடித்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த சென்னாவை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். 2 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி, அரைத்த சென்னாவுடன் சேர்க்கவும். மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு போட்டு கலந்து கொள்ளவும். எண்ணெயை காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, சென்னா கரைசலை அதில் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் பொடித்த பொடியை தூவி இறக்கவும். இதை வடிகட்டி "சூப்"பாகவும் குடிக்கலாம். சாதாரணமாக பருப்பு போட்டு ரசம் செய்வோம். இதில் சென்னா சேர்த்திருப்பதால் புரதச்சத்து நிறைந்து இருக்கிறது.

உளுந்து சப்பாத்தி

Black Gram Chapati - Cooking Recipes in Tamil

தேவையானவை: 

கோதுமை மாவு - 1 கப்
சோயாமாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூரணத்துக்கு:
உளுந்து - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவையும், சோயா மாவையும் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும். ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும், (ஒரு குச்சியை விட்டுப் பார்க்கும்போது மாவு ஒட்டாமல் வர வேண்டும்). பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்துக் கொள்ளவும். கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல் செய்யவேண்டும். உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். சப்பாத்திக்குள் வேக வைத்த உருளைக்கிழங்கை வைத்து செய்வதைத்தான் நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், இந்த சப்பாத்தியில் உளுந்து பூரணத்தை வைத்து செய்வதால், புரதச்சத்து அதிகமாகக் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான டிபன் இது.

கோஸ் மசாலா

Cabbage Masala - Cooking Recipes in Tamil

தேவையானவை: 

முட்டைகோஸ் - 1/2 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் கலவை - தேவையான அளவு
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 2
கருஞ்சிரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன் ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, கருஞ் சிரகத்தை எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் தனித்தனியாக எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் முட்டை கோஸ் போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் பொடித்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வதக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்

Sweet Potato Lollipop - Cooking Recipes in Tamil

தேவையானவை: 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1/2 (அ) 3/4 டேபிள் ஸ்பூன்
மைதாமாவு - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கை கழுவி, தோல் சிவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு மைக்ரோ ப்ரூஃப் பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், வினிகர், மைதாமாவு, தக்காளி கெட்சப், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கலக்கவும். இதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு துண்டுகளைப் போட்டுக் கிளறி ஒரு மணி நேரம் ஊற விடவும்.
ஒரு மைக்ரோ ப்ரூஃப் தட்டில் எண்ணெய் தடவி, மைக்ரோ + க்ரில் காம்பினேஷன் மோடை உபயோகப்படுத்தி (70% பவரில்) 2 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும். பிறகு அந்த மைக்ரோ தட்டில் மசாலாவில் ஊறிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை பரத்தி அதே காம்பினேஷனில் 12 நிமிடம் வேக வைக்கவும். 8 நிமிடத்துக்கு ஒருமுறை துண்டுகளை கிளறவும். 10லிருந்து 15 நிமிடத்துக்குள் தயாராகிவிடும் இந்த லாலிபாப்.
சூடாக இருக்கும்போதே "டூத் பிக்ஸ்" குச்சியை சொருகி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

அசோகா அல்வா

Ashoka Halwa - Cooking Recipes in Tamil    

தேவையானவை: 

பயற்றம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3 கப்
கோதுமைமாவு - 1/4 கப்
ரீபைன்ட் ஆயில் அல்லது நெய் - 2 கப்
கிராம்புப் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - கொஞ்சம்
கேசரி பவுடர் - கொஞ்சம்


செய்முறை: 

பயற்றம் பருப்பை இலேசாக வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் நன்கு குழைய வேக வைக்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுக்கவும். எண்ணெயில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும். அதனுடன் வெந்த பருப்பு, சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்துக் கிளறி, கிராம்புப் பொடி சேர்த்து நன்கு சுருண்டு வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து தாம்பாளத்தில் போட்டு வில்லைகள் போடவும்.

சோயா கட்லெட்

Soya Cutlet - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

சோயாமாவு - 50 கிராம்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
காரட் - 1
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 75 கிராம்
கொத்துமல்லி - சிறிதளவு


செய்முறை:

உருளை, காரட் இவற்றை வேக வைத்து மசித்துக் கொள்ளவும், டீஸ்பூன் எண்ணெயை கடாயில்விட்டு பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் இவற்றைப் போட்டு வதக்கி அதனுடன் உருளை, காரட், மஞ்சள், உப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிய பின் பாதி சோயாமாவு, அரிசி மாவு சேர்த்துக் கலந்து திக்கானவுடன் இறக்கிக் கொள்ளவும். நன்றாக ஆறியபின் எலுமிச்சைசாறு சேர்த்து பின் மற்ற சோயா/அரிசி மாவை உப்பு கலந்து ரெடியாக தட்டில் வைத்துக் கொள்ளவும். கட்லெட் செய்ததை மாவில் போட்டு புரட்டி (உருட்டி) எடுத்து தோசை தவாவில் சிறிது எண்ணெயில் பொரித்து எடுக்க ருசியாக இருக்கும். எண்ணெய் மிகக் குறைவு, சோயா மாவில் செய்ததே குழந்தைகளுக்குத் தெரியாது.

டேஸ்டி ராகி பால்ஸ்

Tasty Ragi Balls - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லப்பொடி - 1/2 கப்
பொடித்த வேர்க்கடலை - 1/2 கப்
வறுத்த எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
சமையல் எண்ணெய் - 1 டீஸ்பூன்


செய்முறை:

கேழ்வரகு மாவுடன் ஒரு சிட்டிகை உப்பை நன்கு கலந்து, திட்டமாக தண்ணீர் தெளித்து அடை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பின்பு தோசைக்கல்லை சூடாக்கி அதில் மாவை மெல்லிய அடைகளாகத் தட்டி வெந்த பின் எடுத்து வைக்கவும். அடைகள் ஆறிய பிறகு சிறு துண்டங்களாக பிய்த்து மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும். வேர்க்கடலை மற்றும் வெல்லத்தை தனித்தனியே மிக்சியில் அரைத்து வைக்கவும். கடைசியாக கேழ்வரகு அடை, வெல்லம், வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சேர சுற்றவும். இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி, வறுத்த எள்ளின் மீது புரட்டி எடுக்கவும். இந்த டேஸ்டி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும். இரும்புச் சத்து நிறைய உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது.

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

Strawberry Milk Shake - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்: 

பால் - 2 கிளாஸ் (உங்கள் வீட்டுகிளாஸ் பெரிய டபரா அளவுக்கோ அல்லது கோலா பானங்களின் மூடி சைஸூக்கோ இருக்கலாம். ஆனால் ஒரு கிளாஸ் என்பதை 200 மி.லி. அளவாகத்தான் நீங்கள் அர்த்தம் கொள்ள வேண்டும்!)
ஸ்ட்ராபெர்ரி - 4
சர்க்கரை - 100 கிராம்
பாலாடை க்ரீம் - கொஞ்சம்
ஐஸ்கட்டி - 15 துண்டுகள்
ரோஸ்எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்


செய்முறை:

பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொண்டு அதில் பாலை ஊற்ற வேண்டும். அதோடு சர்க்கரையையும் ஐஸ் கட்டியையும் சேர்த்து மிக்ஸியில் மூன்று முறை அரைக்க வேண்டும். நுரை பொங்கிய நிலையில் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார். ஒருவேளை ஸ்ட்ராபெர்ரி பழம் கிடைக்கவில்லை எனில், அதற்குப் பதிலாக சப்போட்டாப்பழம் இரண்டைச் சேர்த்து அதே செய்முறையோடு தயார் செய்யுங்கள் "சப்போட்டா மில்க் ஷேக்" ரெடி! நுரை பொங்கியபடியே சாப்பிட்டால்தான் டேஸ்ட் இல்லையென்றால் வேஸ்ட்.

எல்லா ரெட் கலர் பழங்களிலேயும் "லைக்கோடின்" சத்து அடங்கியிருக்கு. நம்ம உடம்புல இருக்கிற இரத்தத்திலேயும் ஐம்பது சதவீதம் அடங்கியிருக்கு. இது 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாத்தான் சத்துக்குறைவு, இரத்த சோகை நோய்களெல்லாம் வருது. (பழத்தோலை உரிச்சா ரெட் கலர்ல இருக்கும்) ரெட்கலர் பழங்களைச் சாப்பிடுவதால் இப்பிரச்சினைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதில் நார்ச்சத்து அடங்கியிருப்பதால் "மலச்சிக்கல்" பிரச்சினைகள் ஃப்ளைட் ஏறி பறந்து விடும். கர்ப்பிணிப் பெண்கள் விரும்பிச் சாப்பிடலாம்.

க்ரேப்ஸ் டிலைட்

Grapes Delight - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்:
கருப்பு திராட்சை - 1/4 கிலோ
டோனமின் எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
சுகர் - 200 கிராம்
எலுமிச்சம் பழம் - பாதி அளவு
தண்ணீர் - 100 மி.லி
சோடியம் பென்சமைடு (எஸ்.பி.பவுடர்) - 1 சிட்டிகை


செய்முறை:

திராட்சையின் விதையை நீக்கிவிட்டு அப்படியே வேக வைக்கவும். ஒயின் மாதிரியான கலரில் இருக்கும். பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து ஆற வைக்கவும். தண்ணீரில் சர்க்கரையைச் சேர்த்து தனியாக கொதிக்க வைத்து அதில் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்க்க வேண்டும். ஆறிய சர்க்கரைத் தண்ணீருடன் ஆறியிருக்கும் திராட்சை ரசத்தையும் சேர்த்து "டோனமின்" எசன்ஸை கலக்க வேண்டும். இந்த எசன்ஸை கலப்பதில் ஓர் சிறிய கண்டிஷன். அப்படியே கலக்காமல் ஆறின தண்ணீரில் கலந்து பிறகுதான் ஜூஸில் கலக்க வேண்டும். பிறகு கண்ணாடி பாட்டிலுக்குள் ஊற்றி வைத்துக் கொண்டால் போதும். நீங்கள் மட்டுமல்ல. உங்கள் உறவினர்கள், விசிட்டர்ஸ் யார் வந்தாலும் கால் கிளாஸூக்கு முக்கால் க்ளாஸ் தண்ணீரைக் கலந்து தாராளமாய் எந்த நேரத்திலும் பருகலாம். பாட்டிலை ஃப்ரிஜ்ஜில் வைக்கத் தேவையில்லை.

கருப்பு திராட்சையில் "ஏ" விட்டமின் இருக்கு. அயர்ன் சத்து (இரும்புச்சத்து) நிறைந்தது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது நல்லது. பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது; தாய்க்கும் நல்லது. அப்பவே செய்து உடனே சாப்பிடணும். சோடியம் பென்சமைடு (எஸ்.பி.பவுடர்) தேவையில்லை. ஆனா பல நாட்கள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டுமானால் ஒரு சிட்டிகை போடலாம்.

சன்ஷைன் ஜூஸ்

Sunshine Juice - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:

கேரட் - 1/2 கிலோ
வெள்ளரி - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
வெள்ளை மிளகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
கருப்பட்டி - 50 கிராம்
எலுமிச்சம்பழச்சாறு - 10 அல்லது 12 துளிகள்

செய்முறை:

முதலில் கேரட்டின் தோலை கட் பண்ணாமல் சுடுதண்ணீரில் போட்டு நன்றாக வாஷ்பண்ண வேண்டும். (ஏன்.. தோலை கட் பண்ணக் கூடாதுன்னா தோல்லதான் விட்டமின் - "ஏ" சத்து அடங்கியிருக்கு) அடியையும் நுனியையும் கட் பண்ணினால் போதும். வெள்ளரியை எப்பவும் போல கட் பண்ணிக்க வேண்டும் தக்காளியை மேலே ரவுண்டா கட்பண்ணி கருப்பட்டி, எலுமிச்சம் பழம், உப்பு எல்லாத்தையும் சேர்த்து அப்படியே மிக்ஸியில் ஒரு அடி அடித்தால்போதும் "திக்"கான சன் ஷைன் ஜூஸ் ரெடி. தண்ணீர் தேவையான அளவுக்கு ஊத்தினால் போதும். தோல் சருமத்துக்கு இது ரொம்ப ரொம்ப நல்ல ஜூஸ். பெண்கள் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவும் வெறும் வயித்துல சாப்பிடுவதுதான் பெட்டர். ஆனால் சுகர், பி.பி. உள்ளவர்கள் வெறும் வயித்துல சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சுகர் பேஷண்ட்டுகள் கருப்பட்டிக்கு பதிலாக சுகர்ஃபிரீ, போட்டு சாப்பிடலாம்.

ஆரஞ்ச் ஜிங்கிள்ஸ்

Orange Jingles - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

ஆரஞ்சுப்பழம் - 6 (கமலா, சாத்துக்குடியாகக் கூட இருக்கலாம்)
சுக்கு - சிறிது
குளுக்கோஸ் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை: 

ஆரஞ்சுப்பழத்தைத் தோல் நீக்கி, சுளையை தனியாக எடுத்துக் கொண்டு, சுக்கு+உப்பைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும். (அதிக நேரம் மிக்ஸியில் அரைத்தால் துவர்ப்புச் சுவை கூடி விடும்) ஆரஞ்சுப்பழத்திலேயே தண்ணீர் இருப்பதால், தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. குளுக்கோஸ் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பரான "எனர்ஜி ஃபுட்" இதுதான் என்பீர்கள். எந்த நேரத்திலும் பருகலாம்.

தேங்காய் பால் ஸ்வீட் கீர்

Coconut Milk Sweet Kheer - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

தேங்காய் பால் - 1 கப் முதல் 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு - 2 டீ ஸ்பூன்
திராட்சை பழம் - 1/2 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
சோள மாவு - 2 ஸ்பூன்

செய்முறை:

தேங்காய் பாலின் முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும். இரண்டாவது பாலை அடுப்பில் 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு சோளமாவை கரைத்து விட்டு, சர்க்கரை போடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி தேங்காய் துருவல், பாதாம், முந்திரி, திராட்சை பழங்களை போட்டு கலந்து பிரிட்ஜில் வைக்கவும். தேவையான போது, ஜில்லென்று பரிமாறவும். மிகவும் சுவையான, வெயிலுக்கேற்ற பானம் இது.

பலாக் கொட்டை பக்கோடா

Jackfruit Seeds Pakoda - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்: 

கார்ன் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
நறுக்கிய முந்திரிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2 ஸ்பூன்

செய்முறை:

நன்கு தேறிய பலாக் கொட்டை மேல் வெள்ளை தோலை எடுத்துவிட்டு குக்கரில் நைஸாக வேக வைக்கவும். ஆறிய பின் மேல் சிகப்பு தோலை உரித்து விட்டு நன்கு மசிக்கவும். இத்துடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசைந்து உருட்டி சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையாக இருக்கும்.

ஆலு டம்ப்ளிங்ஸ்

Aaloo Tumblings - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

உருளைக்கிழங்கு - 5
கெட்டியான பால் - 1 லிட்டர்
ஏலக்காய் - 5
ட்ரை ஃப்ரூட்ஸ் கலவையாக - ஒரு கப்
வாழைப்பழம் - 1
உணவுக்கு சேர்க்கும் நிறங்கள் - பச்சை 2 சொட்டு
மஞ்சள் - 2 சொட்டு
பிங்க் - 2 சொட்டு
சர்க்கரை பொடித்தது - 1/2 கப்
ரோஸ் எஸ்ஸென்ஸ் - 2 சொட்டு
தனியாக சர்க்கரை - 2 ஸ்பூன்


செய்முறை:

உருளைக்கிழங்கைக் கழுவி தோல் சீவி வேக வைக்கவும், இதை மிக மிருதுவான கூழாகப் பிசையவும். இதை மூன்று பிரிவுகளாக்கி வைக்கவும். பாலில் ஏலக்காய் போட்டு சிவக்கக் காய்ச்சவும். அதனுடன் சர்க்கரையைப் (2 ஸ்பூன்) போடவும். மூன்றாகப் பிரித்து வைத்த உருளைக்கிழங்குக் கூழில் பச்சை, மஞ்சள், பிங்க் என்று ஒவ்வொரு நிறம் சேர்க்கவும். அத்துடன் மூன்றிலும் சர்க்கரைப் பொடியை சமமாகப் பிரித்துப் போட்டு ஒவ்வொரு பிரிவிலும் ரோஸ் எஸ்ஸென்ஸ் சேர்த்து எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாகக் கலவையை உருட்டவும். ட்ரை ஃப்ரூட்ஸ் கலவை வாழைப்பழம் இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை ஓடவிடவும். இக்கலவையை சிறு உருண்டைகளாகத் தயாரிக்கவும். உருளைக்கிழங்கு உருண்டையை கிண்ணம் போலச் செய்து இந்தப் பழ உருண்டையை உள்ளே வைத்து மூடவும். கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் இந்த உருண்டைகளைப் போட்டு அடுப்பில் மூடாமல் வேகவைக்கவும். உருண்டை மேலே மிதந்து வரும் போது இறக்கி, குளிரவைத்தோ சூடாகவோ சாப்பிடலாம்.

கம்பு தயிர் வடை

Bajra Dhahi Vada - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

கம்பு மாவு - 300 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
தயிர் - 4 கப்
சீரகத் தூள் - 4 டீஸ்பூன்
பெரிய வெங்காயத்துருவல் - 1 கப்
கொத்தமல்லி - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - சிறிதளவு


செய்முறை:

கம்பு மாவுடன் அரிசி மாவைச் சேர்த்து, உப்பு கலந்து மசால் வடை பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் பச்சை மிளகாய், சீரகத்தூளை சேர்த்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். தயிரை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து அதில் கலக்கவும். இதில் அவித்த கம்பு வடைகளை ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பிளேட்களில் பரிமாறும் முன், வெங்காயத்துருவல், கொத்தமல்லித் தழையை தூவி விடவும். கோடை காலத்திற்கேற்ற சத்தான டிபன், உடலுக்கு குளிர்ச்சி தரும். அனைத்து வயதினருக்கும் உகந்தது. கம்பங்கூழ் பிடிக்காத குழந்தைகள் கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.