கொழுக்கட்டை

Kozhukattai - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

பதப்படுத்திய பச்சரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 11/4 கப்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 11/4 டீஸ்பூன்

பூரணம் செய்வதற்கு:

முக்கால் முற்றிய தேங்காயின் வெள்ளைப் பகுதியை மட்டும் துருவியது - 1 கப்
துருவிய வெல்லம் - 1 கப்
நெய்யில் வறுத்தமுந்திரி துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டு கடலைமாவு - 1 டேபிள் ஸ்பூன்


கொழுக்கட்டை மேல்மாவு செய்யும் விதம்:

பச்சரிசியை களைந்து ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்பு வடிகட்டி மூலம் தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு காட்டன் துணியில் பரவலாக நிழலில் அல்லது ஃபேன் அடியில் ஒன்றரை மணி நேரம் உலர்த்தவும். இதை அரிசி மட்டும் அரைக்கும் மாவு சல்லடையில் சலித்து பெரிய தட்டுக்களில் பரவலாக ஒரு நாள் முழுவதும் நிழலில் நன்றாக உலர்த்தவும். கையில் ஈரம் ஒட்டாமல் நன்கு உலர்ந்த பின் டப்பாவில் போட்டு விட்டு டைட்டாக மூடி விடவும்.


செய்முறை:

1 கப் அரிசி மாவுக்கு 11/4 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அந்த தண்ணீரை ஒரு கனமான கடாயில் கொதிக்க விடவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயும், கால் டீஸ்பூன் உப்பும் சேர்க்கவும். தண்ணீர் கொப்பளித்து கொதிக்கும் போது அடுப்பு தீயை மிக குறைவாக வைத்து அரிசி மாவை நட்ட நடுவில் குவியலாக போடவும். உடனடியாக மாவின் நடுவில் ஒரு கரண்டியை நுழைத்து, வெளிப்புறம் நீட்டிக் கொண்டிருக்கும் இடைவெளியை விட்டு வாணலியை ஒரு மூடியால் மூடவும். பத்து நிமிடங்கள் மிகக் குறைந்த தீயில் வேக விடவும். அடுப்பை அணைத்துவிட்டு, மூடியைத் திறந்து, கரண்டியில் வேகமாக மாவு கட்டி தட்டாமல் கிளறவும். சிறிது சூடு ஆறியதும், கையினால் நன்றாக பிசையவும். தேவையானால், மாவு கையில் ஒட்டாமல் இருக்க இரண்டு கையிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும். நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாகக் கொண்டு இரண்டு கையாலும் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் உபயோகித்து, வெளிப்புறத்திலிருந்து வட்டமாக மிக மெலிதாக கிண்ணம் போல் செய்து கிண்ணத்திற்குள் செய்து வைத்திருக்கும் பூரணத்தை வைத்து சுற்றிலும் இருக்கும் மாவை ஒன்றாக சேர்த்து கோபுர கலசம் போல் கொண்டு வந்து பூரணம் வெளியே வராதபடி எந்தப் பக்கமும் இடைவெளி விரிசல் இல்லாதவாறு செய்ய வேண்டும். பூரணம் செய்ய தேங்காயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இத்துடன் துருவிய வெல்லத்தை கலந்து ஒரு கடாயில் ஒற்றாற்போல் நிதான தீயில் வைத்து, கிளறவும். வெல்லம் நீர்வற்றி சுருண்டு வரும்போது பொட்டுக் கடலை மாவு, ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு சேர்த்து, கலந்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிட்டு சிறு உருண்டைகள் ஆனபின்பு கிண்ணத்திற்குள் பூரணத்தை குவித்து மூடி விடவும். இதை போல் எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லி குக்கரில் வைத்தோ அல்லது வாணலியில் தண்ணீர் வைத்து ஒரு ஓட்டை உள்ள தட்டை வைத்து, அதன் மேல் ஒரு இலையோ மெல்லிய துணியோ போட்டு செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒற்றை பரவலாக வைத்து காற்று புகாமல் மூடி பத்து நிமிடம் வேக வைக்கவும். குக்கரானால் வெயிட் போட வேண்டாம். மேலே ஆவி வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஆறியபின் திறந்து கொழுக்கட்டைகளை ஜாக்கிரதையாக பிரியாமல் நசுங்காமல் எடுத்து வைக்கவும்.