சாக்லெட் குல்பி



கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதில் பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது ஜூஸ் அல்லது ஐஸ் தான். இதில் ஜூஸை அனைவருக்கும் செய்ய தெரியும். ஆனால் ஐஸ் வகைகளில் ஒன்றான குல்பியை செய்யத் தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குல்பியில் ஒன்றான சாக்லெட் குல்பியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.


தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்

பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

சாக்லெட் - 1 கப் (துருவியது)

சர்க்கரை - 1/2 கப்

பிஸ்தா - சிறிது (நறுக்கியது)


செய்முறை:

முதலில் ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

சர்க்கரையானது கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பிஸ்தா மற்றும் சாக்லெட்டை போட்டு, நன்கு கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
சாக்லெட் கரைந்ததும், அதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.

1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்ஸரில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்பி மோல்ட்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 5-6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லெட் குல்பி ரெடி!!!