உருண்டைக் கறிக்குழம்பு

Mutton Urundai Kozhambu - Cooking Recipes in Tamil

தேவையான பொருள்கள்:

மட்டன் (கொத்தியது) - 1 கிலோ
தேங்காய் - 1/2 முடி
வெங்காயம் - 6
தக்காளி - 4
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 3
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உடைத்த கடலை - ஒரு கைபிடி
சோம்பு - சிறிதளவு


செய்முறை:

கறித் துண்டுகளை நன்கு அலசி மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து கொள்ள வேண்டும். தேங்காயை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். உடைத்த கடலையை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் அரைத்த கறித் துண்டுகளைப் போட்டு அதனுடன், வெங்காயம், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் (இது எல்லாமே எடுத்து வைத்திருப்பதில் பாதி அளவு), உடைத்த கடலை தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை என அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், சோம்பு, சேர்த்து பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதையும், பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் (மீதி இருப்பது) சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை போடவும்.

குழம்பு நன்கு கொதித்தவுடன் ஆவியில் வேகவைத்த உருண்டைகளை போட்டு அனல் குறைத்து வைக்கவும். 5 நிமிடம் வைத்து பிறகு இறக்கிவிடவும். இது சாப்பாட்டுக்கு மிகவும் அருமையாக இருக்கும். குழம்பும் தயார், துணை உணவாக கறி உருண்டையும் தயார். கறி உருண்டை குழம்பின் வாசனை உங்களை விட்டு வைக்குமா என்ன, சமைத்து ருசி பாருங்கள்... குறிப்பு : குழம்பில் உருண்டைகளைப் போடும் போது தீ குறைவாக இருந்தால் தான் உருண்டைகள் உடையாமல் வரும்.